இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் மாணவியின் மேற்படிப்புக்கு உதவி , அமைச்சருக்கு மாணவியின் பெற்றோர் நன்றி.

Published Date: May 28, 2023

CATEGORY: CONSTITUENCY

மதுரை ஆனையூர் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த ஒரு மாணவியின் மேற்படிப்புக்கு அமைச்சர் தியாகராஜன் உதவியதால் அந்த மாணவியின் பெற்றோர் அமைச்சரை நேரில் சந்தித்து சனிக்கிழமை நன்றி தெரிவித்தனர்.

மதுரை ஆனையூர் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த மாணவி ரித்யுஷா. இவர் கூடல் நகர் பகுதியில் உள்ள புனித அந்தோனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்தார். பிளஸ் 2 பொது தேர்வில் 600-க்கு 591 மதிப்பெண்கள் பெற்று ரித்யுஷா தேர்ச்சி பெற்றார்.

இது குறித்துத் தகவல் அறிந்த, தகவல் தொடர்பு, எண்ம சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாணவி ரித்யுஷா, அவரது பெற்றோரை தனது இல்லத்துக்கு அழைத்து வாழ்த்தினார். இதையடுத்து அந்த மாணவியின் மேற்படிப்பு கல்விச் செலவுகள் முழுமையும் தானே ஏற்பதாக வாக்குறுதி அளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உடனடியாக மதுரையில் உள்ள ஒரு முன்னணி தனியார் பெண்கள் கல்லூரியில் ரித்யுஷா விரும்பிய துறையில் அவருக்கு இடம் கிடைக்க நடவடிக்கை எடுத்தார். மேலும் அவரது கல்வி கட்டணத்தையும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செலுத்தினார்.

இதையடுத்து, மாணவி ரித்யுஷா, அவரது பெற்றோர் அமைச்சருக்கு தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Media: Dinamani